

வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வருவதோடு, பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் ஏரியில் கரை உடைந்து தேங்கிய நீரும் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் 51 ஏரிகள் நிரம்பி வருகின்றன. நிரம்பிய ஏரிகளில் இருந்து மதகுகள் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அந்த வகையில், சங்கராபுரம் வட்டம் ச.செல்லம்பட்டு பொதுப்பணித்துறை ஏரியும், நெடுமானூர் பொதுப்பணித்துறை ஏரியும், முழுக் கொள்ளளவை அடைந்துள்ளதைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, உபரி நீர் வாய்க்கால் குடியிருப்புப் பகுதியை ஒட்டிச் செல்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக இருக்க வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர் அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளில் இருந்து சுமார் 2500 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் மணிமுக்தா அணைப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டையில் கனமழை பெய்து ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், ஏரியின் கரைப் பகுதியில் குப்பைகளைக் கொட்டி ஏரியைத் தூர்த்துவிடும் பணியை ஊராட்சி நிர்வாகம் செய்துவருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏரியில் கொட்டப்படும் கழிவுநீர் சாலைகளிலும் வாய்க்கால்களிலும் செல்வதால், அப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் பரவும் ஆபத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.