Published : 11 Nov 2021 01:23 PM
Last Updated : 11 Nov 2021 01:23 PM

தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள நிவாரணப் பணிகள் என்னென்ன?- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் | கோப்புப் படம்.

சென்னை

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கனமழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் மருத்துவ உதவிகள் வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழையினால் சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகள், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரை வடியச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான அனைத்துப் பணிகளிலும் தமிழக அரசு முழுவீச்சில் கவனம் செலுத்திப் பணியாற்றி வருகிறது.

இதுகுறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விவரம்:

* செங்குன்றத்திலிருந்து 3000 கன அடியும்,
* செம்பரம்பாக்கத்திலிருந்து 2151 கன அடியும்,
* பூண்டியிலிருந்து 6000 கன அடியும்,
* சோழவரத்திலிருந்து 2015 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

10 மீட்புப் படைக் குழுக்கள்

• பேரிடர்களின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குத் தலா ஒரு குழு, செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா மூன்று குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்கள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 162 முகாம்களில், 9312 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1961 நபர்கள் 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 21,02,420 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வார்டுக்கு ஒருவர் வீதம் 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடன் இணைந்து இந்தப் பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

◦ செங்கல்பட்டு மாவட்டத்தில், 1721 நபர்கள் 42 நிவாரண முகாம்களிலும்,
◦ காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1048 நபர்கள் 29 நிவாரண முகாம்களிலும்,
◦ கடலூர் மாவட்டத்தில், 71 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,
◦ நாகப்பட்டினம் மாவட்டத்தில், 3217 நபர்கள் 10 நிவாரண முகாம்களிலும்,
◦ பெரம்பலூர் மாவட்டத்தில், 72 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
◦ புதுக்கோட்டை மாவட்டத்தில், 380 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும்,
◦ ராணிப்பேட்டை மாவட்டத்தில், 98 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவள்ளூர் மாவட்டத்தில், 218 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவண்ணாமலை மாவட்டத்தில், 299 நபர்கள் 8 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவாரூர் மாவட்டத்தில், 68 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
◦ விழுப்புரம் மாவட்டத்தில், 2040 நபர்கள் 51 நிவாரண முகாம்களிலும்,
◦ அரியலூர் மாவட்டத்தில், 80 நபர்கள் 2 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்

* கடந்த 24 மணி நேரத்தில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
* 157 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.
* 1072 குடிசைகள் பகுதியாகவும், 74 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 1146 குடிசைகளும், 236 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 237 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

◦ பாலாற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப் பெருக்கின் காரணமாக பூட்டுதாக்கு அருகே குடிநீர்க் குழாய்கள் சேதமுற்றதால், வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் பெறும் மேல்விஷாரம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் நகராட்சிகள், ஆற்காடு மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 134 குடியிருப்புப் பகுதிகளுக்கும் தற்காலிகமாக குடிநீர் வழங்கல் தடைப்பட்டது. எனினும், மேற்சொன்ன பகுதிகளுக்கு உள்ளூர் ஆதாரம் மூலம் தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்றில் நீரோட்டம் குறைந்தவுடன் குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

◦ நாகப்பட்டினம் மாவட்டத்தில், 5023 ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீரை வடியச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி

◦ மழைநீர் தேங்கியுள்ள 426 பகுதிகளுள், 53 பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 373 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
◦ மழை நீரால் சூழப்பட்டுள்ள 22 சுரங்கப்பாதைகளில், 13 சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அவை மூடப்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
◦ சாலைகளில் விழுந்த 149 மரங்களில், 146 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 3 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 1609 மருத்துவ முகாம்கள் மூலம் 59,444 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
◦ மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 48 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 ஜெசிபிக்களும், 412 ராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
◦ 11,290 புகார்கள் வரப்பெற்று, 5,395 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

◦ சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

◦ 1070-ல் இதுவரை 1800 புகார்கள் பெறப்பட்டு 1044 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
◦ மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் இதுரை 926 புகார்கள் பெறப்பட்டு, 784 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன''.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x