Published : 11 Nov 2021 11:57 AM
Last Updated : 11 Nov 2021 11:57 AM

சுரங்கப்பாதைகளில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சுரங்கப்பாதைகளில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நேற்று இரவு முதலே சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையின் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. 7 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதைத் தவிர்க்கும்படி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

10.11.2021 இரவு முதல் தற்பொது வரை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில் அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது..

சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம்

தற்போது மழைநீர் தேக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் மண்டலம் வார்டு 5-ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 46-ல் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் வார்டு 55-ல் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை, ராயபுரம் மண்டலம் வார்டு 60-ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 136-ல் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 140-ல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராயநகர் வார்டு 136-ல் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதைகளின் வழியே செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உதவி எண்கள்

பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24x 7 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

பொதுமக்கள் 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 044-2530 3870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 1913 என்ற உதவி எண் மற்றும் 94454 77205, 94450 25819, 94450 25820, 94450 25821 ஆகிய வாட்ஸ் அப் எண்களுக்கும் தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற புகார்கள் குறித்தும், தங்களுக்குத் தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x