

மழைக்காலம் என்பதால் நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கி, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில தினங்களாகத் தலைநகர் சென்னை உள்பட 23 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் வேளையில் தீவிர கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே மக்களுக்கு எந்த வித மழை நோய்த் தொற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் 2 நாட்கள் பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்தி மழையால் பொதுமக்களுக்கு எந்தவித நோய்த் தொற்றும் ஏற்படாத வகையில் சிகிச்சைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, காய்ச்சல், சளி, மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற மழைக்காலங்களில் ஏற்படுவது வழக்கம். இதுபோன்ற நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பு உள்ளதையும் தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு வி.எம்.எஸ்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.