

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐஓசி) கொச்சி சுத்திகரிப்பு ஆலையின் 79 சதவீத சந்தைப்படுத்துதல் உரிமையை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்க1991-ல் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தத் தருணத்தில் ஐஓசி நிறுவனத்தையும், தொழிலாளர்களையும் காக்க களமிறங்கினார் இந்தியன் ஆயில் ஊழியர் சங்கத்தின் (ஐஓஇயூ) பொதுச்செயலாளர் டி.எஸ்.ரெங்கராஜன். அன்றைய பெட்ரோலியத் துறை அமைச்சர் குருபாதசுவாமியையும், செயலாளர் சங்கரானந்தா ஆகியோரையும் நேரில் சந்தித்து மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வைத்தார்.
இவ்வாறு நிறுவனத்தின் நலனையும், தொழிலாளர்களின் நலனையும் காக்க களத்தில் இறங்கிப்போராடிய ‘டிஎஸ்ஆர்’ என்றழைக்கப்படும் டி.எஸ்.ரெங்கராஜன்(82) உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த அக்.29-ம் தேதி சென்னையில் காலமானார்.
டிஎஸ்ஆர், 1939 ஜூலை 24-ம்தேதி ராமநாதபுரத்தில் பிறந்தார். தந்தை சீனிவாசன். தாயார் மதுரவல்லி. வருவாய்த் துறையிலும்,மத்திய கணக்குப் பொதுச்சேவை அலுவலகத்திலும் பணியாற்றியவர், 1963-ல் ஐஓசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பொதுவுடைமை, சோசலிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட டிஎஸ்ஆரின் வாழ்வில், ஐஓசி நிறுவனப் பணி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்வதற்காகத் தொடங்கப்பட்ட ஐஓசியில் கடுமையான தொழிலாளர் நடைமுறைகள் இருந்தன. இந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த டிஎஸ்ஆர், அதற்கு தீர்வுகாணும் முயற்சியாக 1966 மார்ச்10-ல் இந்தியன் ஆயில் ஊழியர் சங்கத்தை (ஐஓஇயூ) தொடங்கினார்.
முதல் ஆண்டிலேயே தொழிலாளர்கள் நலனுக்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தினார். இதற்கிடையே தனது 24 வயதில் தந்தையை இழந்தார். இதனால், குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு வந்தது. 1974-ல் இந்தியன் ஓவர்சீஸ்வங்கியில் பணிபுரிந்த வத்சலாவை திருமணம் செய்து கொண்டார்.
முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தன் முயற்சியால் 1972-ம் ஆண்டு சென்னையில்உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து ‘மெட்ராஸ் டிரேட் யூனியன் கவுன்சில்’ (எம்டியுசி) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக டிஎஸ்ஆர் இருந்தார். சென்னையில் உள்ள பல்வேறுதொழிற்சங்கங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இச்சங்கம் வெற்றிகரமாக செயல்பட்டது. இதற்கு டிஎஸ்ஆரின் அர்ப்பணிப்பும், சாதுர்யமும் மிகமிக முக்கிய காரணம்.
1977-ல் பூதலிங்கம் கமிட்டி பரிந்துரைப்படி அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டது. இது போதுமானதாக இல்லை என்பதால் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இத் தருணத்தில் பொதுத்துறை நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிஎஸ்ஆர் முக்கியப் பங்குவகித்தார். இறுதியில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களும் பயனடைந்தனர். டிஎஸ்ஆரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க சாதனைஇது.
1966 முதல் கடந்த 55 ஆண்டுகளில் தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களிலும் டிஎஸ்ஆர் கையெழுத்திட்டுள்ளார். தொழிற்சங்க வரலாற்றில் பெரும் சாதனை இது. தொழிற்சங்க வரலாற்றில் தொடர்ந்து 55 ஆண்டுகள் பணியாற்றுவது என்பது சாதாரணமானது அல்ல. தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே அது சாத்தியம்.
2020-ல் கரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது பணிக்கு வர தொழிலாளர்கள் அஞ்சினர். அந்தத் தருணத்தில் தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தினார். ஓராண்டாக நோயுடன் அவர் போராடியபோதும் ஐஓஇயூ சங்கம் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார்.
டிஎஸ்ஆர் மறைந்தாலும் 55ஆண்டுகால அவரது தொழிற்சங்கப் பணிகள் இன்னும் நூறாண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த அக்.29-ல் அவர் மறைந்தபோது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதே அதற்கு சாட்சி.
மறைந்த டி.எஸ்.ரெங்கராஜனுக்கு மனைவி வத்சலா, மகள்கள் பிரியா ரங்கராஜன், ஆரத்தி வெங்கடேஷ், பார்கவி ஸ்ரீஹரி ஆகியோர் உள்ளனர்.