Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்- மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்கிறது: சென்னை உட்பட 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

சென்னை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை உட்பட 8 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தமிழக கடற்கரை பகுதியை இன்று காலை 11 மணி அளவில் நெருங்கும். அதைத் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும், ஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், கடலூருக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதன் தாக்கத்தால் 11-ம் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

12-ம் தேதி கோவை, நீலகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங் களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

13-ம் தேதி நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் 14-ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதி கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம், திருப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 31 செ.மீ., காரைக்காலில் 29 செ.மீ., வேதாரண்யத்தில் 25 செ.மீ., தலைஞாயிறு பகுதியில் 24 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ., பேராவூரணியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 11-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே இன்று கரையை கடக்கும் என்று எஸ்.பாலசந்திரன் அறிவித்திருந்தார். ஆனால், அது மாமல்லபுரம் அருகே இன்று மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னைக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

அதிகனமழை காரணமாக சென்னையில் 12-ம் தேதி காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் மற்றும் மின் விநியோகம் பாதிக்கக்கூடும். சாலைகளில் வெள்ளம் ஏற்படும் என்பதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படக்கூடும். பொதுமக்களின் சொத்துகள், உடைமைகளும் சேதமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களுக்கு உதவ முன் வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் மாநகராட்சி இணையதளம் வழியாக தங்கள் விவரங்களை பதிவு செய்துக்கொள்ளலாம். தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மாநகராட்சி அணுகி உதவி கோரும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

டெல்டாவில் சேதம்

இதனிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழைப் பொழிவு அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி இந்த ஆண்டு ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு மேல் முடிவுற்ற நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சுமார் 20 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் ரெட்டிபாளையம், திருவையாறு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கும்பகோணம் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், சம்பா நடவுக்கான 1,500 ஏக்கர் நாற்றங்காலிலும் மழைநீர் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் சாய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, திருவையாறு பகுதியில் மழையின் காரணமாக வெற்றிலை கொடிக்கால் சுமார் 100 ஏக்கரில் சேதமடைந்துள்ளது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 31 செ.மீ மழை பெய்தது. இதன் காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினர் தெரிவிக்கின்றனர். நேற்று பகல் நேரத்தில் மழை இல்லாததால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியத் தொடங்கியுள்ளது. மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 60 இடங்களை ஏற்கெனவே கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் மழைநீர் வடிய உரிய ஏற்பாடுகளை செய்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதேபோல திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள நெல் மற்றும் வாழை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x