

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்று, இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது. இதையொட்டி பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மழை பாதிப்பைக் கண்காணிக்க பொறுப்பு மற்றும் ஒருங்கிணைப்புஅதிகாரிகளாக 5 மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளைகண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது 10 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு 10 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, மீட்பு, நிவாரணப்பணிகளை மேற்பார்வையிடுவதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வர்.
அதன்படி, திருச்சி மாவட்டத்துக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், ஈரோடுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.பிரபாகர், வேலூருக்கு பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார், ராணிப்பேட்டைக்கு பேரூராட்சிகள் ஆணையர் ஆர்.செல்வராஜ், நாகைக்கு தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் கே.பாஸ்கரன், கடலூருக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைச் செயலர் வி.அருண்ராய், மதுரைக்கு கருவூலத் துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், திருவள்ளூருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ஆர்.நந்தகுமார், அரியலூருக்கு (பெரம்பலூருடன் கூடுதலாக) தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநர் அனில் மேஷ்ராம், விருதுநகருக்கு பிற்படுத்தப்பட்டோர் துறை இயக்குநர் சி.காமராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ளஅதிகாரிகளுக்குத் தேவையானஆலோனைகளை வழங்குவதுடன், பணிகளையும் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் தினசரி பணிகள் குறித்து தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.