

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளதால், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கால்வாய்களில் வலைகளை விரித்து அதிக அளவில் மீன்களை பிடித்து வருகின்றனர். பெரிய அளவிலான மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அவ்வாறு கிடைக்கும் கட்லா, கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, ஏரி வஞ்சிரம், தேளி உள்ளிட்ட பெரிய அளவிலான மீன்களை குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, காவனூர் கிராமம் அருகே சாலையோரம் கடைகள் அமைத்து விற்று வருகின்றனர்.
பொதுமக்கள் உயிருடன் கிடைக்கும் ஏரி மீன்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இவை கிலோ ரூ.100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடல் மீன்களைக் காட்டிலும் தற்போது ஏரி மீன்கள் குறைந்த விலைக்கும் உயிருடனும் கிடைப்பதால் பொதுமக்கள் அதனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.