Published : 30 Mar 2016 07:33 AM
Last Updated : 30 Mar 2016 07:33 AM

வேட்பாளர்கள் உறுதிமொழிப் பத்திரத்தை இணையதளத்தில் தாக்கல் செய்யலாம்: புதிய வசதியை அறிமுகம் செய்தது ஆணையம்

வேட்பாளர்கள் இணையதளம் மூலம் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வேட்பு மனுவுடன் உறுதிமொழிப் பத்திரம் (படிவம் 26) தாக்கல் செய்ய வேண்டும். நோட்டரி பப்ளிக், பிரமாண ஆணையர் அல்லது முதல் வகுப்பு நடுவர் முன்னிலையில் வேட்பு மனு சான்றொப்பம் இட வேண்டும். இந்த நடைமுறை சட்டரீதியான தேவை என்பதால், இணையதளம் மூலம் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியான ‘www.eci.nic.in’ ல் ‘online submission of candidate affidavits’ என்ற பகுதிக்குள் செல்ல வேண்டும். அதில் வேட்பாளர்கள் முத்திரைத் தாளில் அச்சு எடுப்பதற்கான வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தகவல்களை பதிவு செய்து பிரமாண ஆணையர் அல்லது முதல் வகுப்பு நடுவர் அல்லது நோட்டரி பப்ளிக் முன்னிலையில் உறுதிமொழிப் பத்திரத்தை அதற்குரிய கட்டணத்துடன் முத்திரைத் தாளில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரம், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

மேலும், இணையதளம் மூலம் வேட்பாளர்களே உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யலாம். அதை பூர்த்திசெய்ய தேவையான ஆன்லைன் உதவி கொடுக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை அச்சு எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் முழுமையாக பூர்த்திசெய்யப்பட வேண்டும். இல்லாத விண்ணப்பங்களை இணையதளம் ஏற்காது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையம் உறுதி மொழிப் பத்திரத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இணையதளம் மூலம் உறுதி மொழிப் பத்திரத்தை தாக்கல் செய்வதில் வேட்பாளருக்கு கூடுதல் செலவு ஏதுமில்லை.

இணையதளம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை வேட்பாளர் அச்சு எடுத்த பின்பும், பார்த்துக் கொள்ளலாம். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சான்றொப்பமிடப்பட்ட உறுதி மொழிப் பத்திரம் தாக்கல் செய்யும் முன்வரை, இணையதள பதிவில் மாற்றங்கள் செய்யலாம்.

இந்த இணையதள சேவைகள் தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய செக்யூரிட்டி டெபாசிட்டரி லிமிடெட் ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x