அம்மா உணவகங்களில் ஜெயலலிதா, பழனிச்சாமி புகைப்படங்கள் வைக்கக்கோரிய மனு தள்ளுபடி 

அம்மா உணவகங்களில் ஜெயலலிதா, பழனிச்சாமி புகைப்படங்கள் வைக்கக்கோரிய மனு தள்ளுபடி 
Updated on
1 min read

அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை வைக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் நோக்கத்தில் ஏராளமான இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அம்மா உணவகங்களில் இருந்து ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, அம்மா உணவகங்களில் அகற்றப்பட்ட ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில், அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என விதியில்லை. அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை வைப்பது அரசின் கொள்கை முடிவு. அதை மனுதாரர் கேள்வி கேட்க முடியாது என்றார்.

இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in