Last Updated : 10 Nov, 2021 08:30 PM

 

Published : 10 Nov 2021 08:30 PM
Last Updated : 10 Nov 2021 08:30 PM

கோவையில் 21 இடங்கள் பருவமழையால் பாதிக்கப்பட வாய்ப்பு: தயார் நிலையில் உள்ளதாக கண்காணிப்பு அலுவலர் தகவல்

கோவை மாவட்டத்தில் 21 இடங்களில், பருவமழையால் பாதிப்புகள் ஏற்படும் என மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் கண்காணிப்ப அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழைக்கால முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,இன்று (10-ம் தேதி) மாலை நடந்தது.

இக்கூட்டத்துக்கு கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார்.

பின்னர், இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைக்காலத்தை எதிர்கொள்ள கோவை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பேரூர், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய வட்டங்களில் மொத்தம் 21 இடங்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநகராட்சிப் பகுதியில் 65 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள அனைத்து பாலங்கள், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் எளிதில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளில் ஈடுபட 1,758 பேர் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில், மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பருவமழை பாதிப்புகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1077, 0422 - 2306051 முதல் 54 வரையும் மற்றும் 2303537 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 94899-46722 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மாநகராட்சி பிரதான அலுவலகத்தை 0422-2302323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், 81900 00200 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அவிநாசி சாலை, திருச்சி சாலைகளில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக செல்ல மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x