

கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் சிப்பி மீன் சீஸன் துவங்கியுள்ளது. வழக்கத்தைவிட மீன்பாடு குறைந்து 30 சதவீதம் மட்டுமே கிடைத்து வருவதால் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது.
நீண்ட கடற்கரையை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இது தவிர அனைத்து மீனவ கிராம கடற்கரை பகுதிகளிலும் நாட்டுப்படகு, வள்ளங்களில் மீன்பிடி பணி நடந்து வருகிறது. இங்கு கரையோர, மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்தலில் பலரக உயர்தர மீன்களும் கிடைத்து வருகின்றன. சுவை மிகுந்ததாக இங்குள்ள மீன்கள் இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி கேரளா உட்பட பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சிப்பி மீன்கள் குமரி கடலில் உள்ள பாறைகளில் அதிக அளவில் பிடிபடும். இதற்கான சீஸன் கடந்த ஒரு வாரமாக துவங்கியுள்ளது. முத்துக்குளிக்கும் பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை இடுக்குகளில் இருக்கும் சிப்பி மீன்களை எடுத்து கரைசேர்த்து வருகின்றனர். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடல் பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து சிப்பி மீன்களை எடுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குளச்சல் துறைமுகத்தை சுற்றியுள்ள பாறைகள், மற்றும் குறும்பனை, இனயம், மிடாலம், கடியப்பட்டணம், முட்டம், வாணியக்குடி போன்ற மீனவ கிராமங்களில் அதிகமானோர் சிப்பி மீன்களை பிடித்து வருகின்றனர். அதிக புரதம், மற்றும் இறைச்சி போன்ற தன்மையுடைய மீன்ரகம் என்பதால் சிப்பி மீன்கள் அசைவ பிரியர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.
ஆனால் கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவாகவே சிப்பி மீன்கள் கிடைத்து வருகிறது. அதாவது சீஸன் நேரத்தில் கிடைக்கும் சிப்பி மீன்களில் 30 சதவீதம் மட்டுமே கிடைத்து வருவதால் அதற்கு தேவை அதிகம் உள்ளது. இதுகுறித்து குளச்சலை சேர்ந்த முத்துக்குளிக்கும் பயிற்சி பெற்ற சிப்பி மீன்பிடிக்கும் மீனவர்கள் கூறுகையில்; "அதிகமாக பிடிபடும் நேரத்தில் 600 சிப்பி மீன்களுக்கு மேல் எண்ணம் கொண்ட ஒரு பெட்டி சிப்பி மீன் வழக்கமாக 1000 ரூபாய்க்குள் விற்பனை செய்ய முடியும். ஆனால் தற்போது மிகவும் குறைவாக கிடைப்பதால் ஒரு பெட்டி சிப்பி மீன் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. 4 மடங்கு விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரள மதுபார்களில் சிப்பி மீன் ரக உணவுகள் அதிகமாக பரிமாறப்படுவதால் அங்குள்ள வியாபாரிகள் இதை விரும்பி வாங்கி செல்வர். ஆனால் தேவைக்கு சிப்பி மீன்கள் கொடுக்க முடியவில்லை. இந்தமாத இறுதியில் இருந்து அதிகமாக சிப்பி மீன் கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.