Published : 10 Nov 2021 05:25 PM
Last Updated : 10 Nov 2021 05:25 PM

சென்னையில் கனமழை: ஸ்டாலின் 4-வது நாளாக நேரில் ஆய்வு: மழைநீர் அகற்றும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜி.என்.செட்டி சாலை, சத்தியமூர்த்தி பள்ளி அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

கனமழையால் சென்னையின் பலபகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதல்வர் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காவது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

தி.நகர் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் மழைநீர்

இன்று (10.11.2021) சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கட்டுப்பாடு அறையின் தொலைபேசி வாயிலாக நேரடியாக கேட்டறிந்து, அதனை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளையும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், ஜி.என்.செட்டி சாலையில் சத்தியமூர்த்தி பள்ளி வளாகம், விஸ்வநாதபுரம், ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் மழைநீர் அகற்றும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் உட்புறத்தில் மாம்பலம் கால்வாய் அடையாற்றில் கலக்கும் இடத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை முதல்வர் பார்வையிட்டார்.

4,40,500 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 1548 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை மற்றும் மதியம் சுமார் 4,40,500 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டாக்டர் நா.எழிலன்,
த.வேலு, ஜெ.கருணாநிதி அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x