சென்னை புறநகர் ரயில் சேவை நேரம் நாளை மாற்றம்; தெற்கு ரயில்வே
கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்கள் வார இறுதி நாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது;
"சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், நாளை 11.11.2021 (வியாழன்) அன்று புறநகர் ரயில் சேவைகளான ; சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
