தமிழகத்தில் கனமழை; ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கின: டெல்டா விவசாயிகள் வேதனை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கிய நிலையில் டெல்டா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

நெற்பயிர்கள் விளைந்துள்ள நிலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன. தாளடி சாகுபடி பட்டத்தில் பயிரிடப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும்நிலையில் மழையால் நெற்பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல அக்டோபரில் விதைக்கப்பட்ட சம்பா பயிர்கள் ஜனவரியில் அறுவடைப் பயிர்கள் நடக்க இருக்கும் நிலையில் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இளம் நாற்றுக்கள் நீரில் அழுகத் தொடங்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒருலட்சம் ஏக்கர் அளவில் பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரியில் அறுவடை நடக்க இருந்த நிலையில் பயிர்கள் நிலத்தில் மூழ்கின. தொடர்மழையால் நடவுப்பணிகள் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கிதால் விவசாயிகள் கடும் வேதனைஅடைந்தள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாகக் கூறும் விவசாயிகள் ஒருமுறை ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 5 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். 8 செ.மீ.க்கு மேலே மழை பெய்தாலே பயிர்கள் நீரில் மூழ்கும் என்று கூறும் விவசாயிகள் தற்போது டெல்டா மாவட்டங்களில் 10 செ.மீட்டரிலிருந்து 20 செ.மீட்டர் வரை மழையின் அளவு அதிகரித்துள்ள நிலையில் விவசாயம் முழுவதும் நாசமடைந்துள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளனர். பாசன வாய்க்கால்கள் சரியான முறையில் தூர் வாரததாலும் பயிர்கள் நீரில் மூழ்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

இம்முறை பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in