

இயற்கை பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பால் கிடைக்க உழைப்பவர்கள் முகவர்களே; அவர்களை அங்கீகரியுங்கள் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புயல், தொடர்மழை, பெருவெள்ளம் போன்று கனமழையால் ஏற்படும் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களின் குடும்பம் குறித்து கவலைப்படாமல், தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மக்களுக்கு தங்குதடையற்ற சேவையை வழங்கி வரும் பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் உழைப்பையும், தனியார் நிறுவனங்களின் அளப்பரியா பங்களிப்பையும் தமிழக அரசும், பால்வளத்துறையும் தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பதோடு அவர்களின் சேவை சார்ந்த உழைப்பை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல.
தமிழகத்தின் தினசரி பால் தேவையில் சுமார் 84% பால் தேவையை பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மறைத்து, வெறும் 16% தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தங்குதடையின்றி பால் விநியோகம் செய்வது போன்ற மாயத்தோற்றத்தை அச்சு, காட்சி ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது, அதனை ஆட்சியாளர்களே ஊக்குவிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உழைப்பிற்கேற்ற வருமானமோ, அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அங்கீகாரமோ இதுவரை கிடைக்கவில்லை என்றாலும் கூட எந்த ஒரு பலனையும் அரசு தரப்பில் இருந்து எதிர்பாராமல் மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற அடிப்படையில் செயலாற்றி, இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை மக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க தங்களை மெழுகுவர்த்தி போல உருக்கிக் கொண்டு செயல்படும் பால் முகவர்களின் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை பால் முகவர்கள், பால் வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் உழைப்பை திருடி அதன் நற்பெயரை தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் சொந்தம் கொண்டாடுவதை நிறுத்திக் கொள்வதோடு, பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் உழைப்பை இனியாவது அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.