கைத்துப்பாக்கி பதுக்கல்: ஆவின் உதவி பொதுமேலாளர் புதிய வழக்கில் கைது

கைத்துப்பாக்கி பதுக்கல்: ஆவின் உதவி பொதுமேலாளர் புதிய வழக்கில் கைது
Updated on
2 min read

வேலூர் ஆவினில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான உதவி பொது மேலாளர், டிரங்க் பெட்டியில் உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி பதுக்கி வைத்தது தொடர்பான புதிய வழக்கில் சிக்குகிறார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், வேலூர் ஆவினில் தினக்கூலி பணியாளர்களின் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட நபர்களுக்கான சம்பள நிலுவைத்தொகை ரூ.5.23 லட்சம் வழங்க வேண்டியுள்ளது. இந்த தொகைக்கான காசோலையை ஜெயசந்திரனுக்கு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்கும்படி ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால் (57) கேட்டுள்ளார்.

இது தொடர்பான ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகேந்திரமாலை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (நவ.9)கைது செய்தனர். இதனை தொடர்ந்து சத்துவாச்சாரி தென்றல் நகரில் உள்ள மகேந்திரமால் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று இரவு நடத்திய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த சோதனையின்போது ஒரு இரும்பு டிரங்க் பெட்டியில் துணிகளுக்கு நடுவில் ஒரு சிறிய பையில் உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கியுடன் 6 தோட்டாக்கள் மற்றும் 0.32 மி.மீ ரக கைத்துப்பாக்கி குண்டுகள் 2-ஐ பறிமுதல் செய்தனர். கைத்துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக மகேந்தரிமாலிடம் போலீஸார் விசாரணை நடத்தியதுடன் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அவரை வேலூர் மத்திய சிறையில் நள்ளிரவு அடைத்தனர்.

உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மகேந்திரமால் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக்கு முன்பு லக்னோவில் உள்ள கல்லூரியில் படித்தபோது இந்த உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கியை வாங்கியுள்ளார். பால்வளம்படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர் 1989-ல் தமிழக ஆவினில் பணியில் சேர்ந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 6 தோட்டாக்களில் 4 தோட்டாக்கள் 60 மி.மீ அளவும், 2 தோட்டாக்கள் 55 மி.மீ அளவும் கொண்டது. இந்த இரண்டு வகை தோட்டாக்களையும் அவரது கைத்துப்பாக்கியில் பயன்படுத்த முடியும். இதனுடன், 0.32 மி.மீ அளவு கொண்ட இரண்டு கைத்துப்பாக்கி குண்டுகள் இருந்தது. இதை அவரது அண்ணனிடம் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார். அவரது அண்ணன் உத்திரபிரதேச மாநிலத்தில் மாவட்ட வன அலுவலராக பணியாற்றியுள்ளார்.

இந்த துப்பாக்கி, தோட்டாக்கள் தன்னிடம் இருந்ததை மறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுவரை அந்த துப்பாக்கியை தான் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்தது சட்டப்படி குற்றமாகும். எனவே, துப்பாக்கி பதுக்கியது குறித்து விசாரணை நடத்தும்படி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள்’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in