

சென்னையில் முறையாக தூர்வாரும் பணிகள் நடந்ததால்தான் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாக சென்னை மா நகராட்சி ஆணையர் ககன்சிங் தீப் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 7-ம்தேதி பெய்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்சிங் தீப் பேடி கூறியிருப்பதாவது, “கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 800 கிமீ வடிகால்கள் தூர்வாரப்பட்டன. முறையாக தூர்வாரப்பட்டதால்தான் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. மழை நீர் தேங்கிய இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுமையாக முடியவில்லை. திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.
உதவி எண்கள்
மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், பருவமழை குறித்து கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெறவும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுபாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணும் செயல்பட்டு வருகிறது.
மேலும், 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்ற உதவி எண், மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக அதிக புகார்கள் வரும் என்பதால் 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரே நேரத்தில் 30 பேர் புகார் தெரிவிக்க முடியும்.
மேலும் 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற 3 வாட்ஸ்அப் எண்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தவாட்ஸ்அப் எண்களில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்கியது, மரக்கிளை விழுந்தது மற்றும் இதர புகார்கள் குறித்து தெரிவிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.