மழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க அரசு தயாராக இருக்க வேண்டும் : ஜி.கே.வாசன்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"தமிழக அரசு ; வடகிழக்கு பருவமழை பெய்யும் இக்காலத்தில் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி உள்ளிட்ட பயிர்கள் கனமழையில் மூழ்கி பாழாகிவிட்டதால், அவற்றை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் இக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

கன மழையின் காரணமாக திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டப் பகுதியில் பயிரிடப்பட்ட நெல், சோளம், பருத்தி போன்ற பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

ஒவ்வொரு ஏக்கருக்கும் குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர் செய்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இன்னும் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடிகால் பிரச்சனை காரணமாக, மழை நீரும் தேங்குவதால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டம் சந்தித்துள்ளனர்.

குறிப்பாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் கன மழையினால் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் கனமழையால் சேதமடைந்து, அழுகி, வீணாகிவிட்டதை கவனத்தில் கொண்டு உடனடியாக அவற்றை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in