திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 5 நாட்களாக யாகபூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6 மணிக்கு யாக சாலைக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்துக் வந்து சேர்ந்தார். அங்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சூரபத்மனை வதம் செய்வதற்காக சுவாமி ஜெயந்திநாதர் போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 5 மணி அளவில் கடற்கரை முகப்புக்கு வந்தார். அங்கு சுற்றிலும் தகரத்தால் மறைக்கப்பட்ட பகுதிக்குள் சூரசம்ஹாரம் தொடங்கியது.

முதலில் யானைத்தலையுடன் வந்த கஜமுகாசூரனை முருகப்பெருமான் தனது வெற்றிவேலால் வீழ்த்தினார். தொடர்ந்து சிங்கமுகத்துடன் வந்த சூரனையும் வீழ்த்தினார். பின்னர் தனது சுயரூபத்துடன் வந்த சூரபத்மனை சுவாமி தனது வெற்றி வேலால் வதம் செய்தார். அதன்பிறகு சூரபத்மனை சேவலாகவும், மாமரமாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை, அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி, மகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கரோனா வழிகாட்டு நெறிமுறை காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சூரசம்ஹாரம் முடிந்ததும் வீடுகளில் விரதமிருந்த பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர். கந்த சஷ்டி விழாவின் 7-ம் நாளான இன்று (நவ.10) இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

சுவாமிமலை

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோயில் உள்பிரகாரத்தில் சூரனை வதம் செய்தார். இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் இருந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னையிடம் பெற்ற சக்திவேலைக் கொண்டு நேற்று சூரனை சிங்காரவேலர் சம்ஹாரம் செய்தார். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரி வீதிகளில் சூரசம்ஹாரம் நடந்தது. மலைக்கோயிலில் மரிக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கிய சின்னக்குமாரர், மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சூரசம்ஹாரம் நேற்று கோயிலுக்குள் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயிலுக்கு வெளியே திரளான பக்தர்கள் திரண்டிருந்து அரோகரா கோஷத்துடன் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உள்ள 16 கால் மண்டபத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கையில் வேலுடன் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி, சூரனை சம்ஹாரம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in