Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20,000 நிவாரணம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகலில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளியன்று கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

அதேபோல, ஒரு கிலோ கேரட் ரூ.100, பீன்ஸ் ரூ.90, கத்தரிக்காய் ரூ.85, குடைமிளகாய் ரூ.150, வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றவர்கள் 2, 3 நாட்கள்கழித்து சென்னைக்குத் திரும்புமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், இந்த மாதத்துக்கான மின் கட்டணத்தைச் செலுத்த இயலாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

அதேபோல, சென்னையில் உள்ளவர்கள் கனமழை காரணமாகவீட்டில் தேங்கிய நீரை வெளியேற்றுவதிலும், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையிலும் உள்ளனர். எனவே, இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.

அதேபோல, பெரம்பூர், வில்லிவாக்கம், கே.கே. நகர், அசோக் நகர், தி.நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2015-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக ரூ.5,000 வழங்கினார். அதேபோல, தற்போது வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x