அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
Updated on
2 min read

அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதை செயல்படுத்தும் வகையில், கேபிள் டிவி நிறுவனம் மூலம் ‘இல்லந்தோறும் இணையம் ’ திட்டத்தை நேற்று அவர் தொடங்கி வைத்தார்.

இது தவிர அரசின் தொலைநோக்கு திட்ட அறிக்கை 2023-ன்படி மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள மனித ஆற்றலை பயன்படுத்தி புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் ரூ.3 கோடியே 53 லட்சத்தில் தொழில்முனைவோர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்காக மேகக் கணினி (கிளவுட் கம்ப் யூட்டர்) சார்ந்த சேவைகள் மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தகவல் தொழில் நுட்ப மற்றும் கணினி உட்கட்ட மைப்பை சிறப்பாக பயன்படுத்தி பல்வேறு துறைகளின் கணினி பயன்பாடுகளை ஏற்றம் பெறச் செய்யும் வகையில் ரூ.10 கோடியே 41 லட்சத்தில் மேகக் கணினி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றின் செயல்பாடு களையும் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும், திருச்சி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 53 கோடியே 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள பேரிடர் மீட்பு மையம் மற்றும் சென்னை பெருங்குடியில் ரூ.40 கோடி மதிப்பில் தமிழ்நாடு மாநில தரவு மையம்- இரண்டாம் பிரிவுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்

நிகழ்ச்சியில், அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், நிறுவன இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசு கேபிள் டிவி நிறுவனமும் தனது இணைய வசதி சேவையை தற்போது தொடங்கியுள்ளது.

கேபிள் டிவி மூலம் இணைய வசதி பெறுவது எப்படி என்பது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு கேபிள் டிவி நிறுவனத் துக்கு தற்போது 26 ஆயிரத்து 410 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 70 லட்சத்து 52 ஆயிரம் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இணைய வசதியை அளிக்க விரும்பும் ஆபரேட்டர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர். நாங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் மூலம் வோடபோன் நிறுவனத்திடம் இருந்து அலைவரிசையை பெற்றுள்ளோம். ஏற்கெனவே அனைத்து மாவட்டங்களிலும் சோதனை முறையில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் ஆயிரத்து 100 வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து, சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் தற்போது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இணைய இணைப்புக்கு தேவையான மோடம், ரவுட்டர் இவற்றை சந்தாதாரரே தேர்வு செய்துகொள்ளலாம். இந்த இணைப்புக்காக கண்ணாடி இழை கேபிள்கள் பயன்படுத்தப்படு கின்றன. ஏற்கெனவே கேபிள் டிவி இணைப்புக்காக இந்த கேபிள்கள் பயன்படுத்தப்பட்டி ருந்தால் அதில் இருந்து இணைப்பு எடுக்கலாம். இல்லையெனில் அந்த கேபிள்களுக்கான தொகை செலுத்தப்பட வேண்டும். ரூ.299, 499, 549, 649, 799, 899 என 6 வகையான திட்டங்கள் உள்ளன. ரூ.899 திட்டத்தில் மாதம் 40 ஜிபி வரை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in