

கொலை மிரட்டல் வழக்கில் தேமுதிக எம்எல்ஏவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்ய பட்டது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ தமிழழகன். இவர் கடந்த மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய் தார். இந்நிலையில் இவர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக திட்டக்குடி போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பான புகார் மனுவில், “கடந்த மார்ச் 3-ம் தேதி என்னுடைய மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், அரசியலை விட்டு ஒதுங்கிவிடு. இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டினார்’’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், தமிழழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. அதையடுத்து பார்த்தசாரதி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக் கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்தசாரதி மனுதாக்கல் செய்தார்.
இந்தமனு நீதிபதி ஆர்.மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை வாபஸ் பெறுவதாக மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.