

பொய்கை அணை கட்டிய பின்பு முதல் முறையாக தோவாளை, ராதாபுரம் பகுதிக்கு 30 நாட்களுக்கு 77 மில்லியன் கனஅடி பாசனத்திற்காக விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீரை திறந்து விட்ட சட்டப்பேரவை தலைவர் இதை தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள பொய்கை அணை 2000ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதுவரை முழு கொள்ளளவை எட்டாத தற்போது கனமழையால் 42.65 அடியை தாண்டி மறுகால் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து பாசனத்திற்காக பொய்கை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணைபிறைப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் பொய்கை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அப்பாவு தெரிவிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணைகளில் ஒன்றான பொய்கை அணையானது கலைஞர் கருணாநிதியால் கட்டப்பட்டது. இவ்வணையின் நீர்பிடிப்பு பகுதியாக கடுக்கரைக்கு மேல் உள்ள இரப்பையாறு, சுங்கான்ஓடை ஆகியவை உள்ளது. அணை கட்டிய பின்பு முழு கொள்ளவை எட்டியுள்ள பொய்கை அணையில் இருந்து இன்று முதலை் (9ம் தேதி) டிசம்பர் 8ம் தேதி வரை 30 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் மொத்தம் 77.66 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
விவசாய பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள இத்தண்ணீர் மூலம் தோவாளை, ராதாபுரம் வட்டங்களுக்குட்பட்ட கரும்பாட்டுகுளம், கிருஷ்ணன்குளம், பொய்கை குளம், குட்டி குளம், செண்பகராமன் பெரியகுளம், தோவாளை பெரியகுளம், வைகைகுளம், ஆரல்வாய்மொழி பெரியகுளம் ஆகிய குளங்களில் தண்ணீர் சென்றடைகிறது. இதன் மூலம் 450.24 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், ஞானதிரவியம் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.