அடுத்தாண்டு முதல் மாநில மொழிகளில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட திறன் தேர்வு: மத்திய அரசு தகவல் 

அடுத்தாண்டு முதல் மாநில மொழிகளில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட திறன் தேர்வு: மத்திய அரசு தகவல் 
Updated on
1 min read

அடுத்தாண்டு முதல் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட திறன் சோதனை தேர்வு மாநில மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் உப்பூர் மோர்பண்ணையை சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசு சார்பில் இளம் விஞ்ஞானிகள் ஊக்கத்திட்டத்தில் (கேவிபிஒய்) மாணவர்களின் அறிவியல் திறன் சோதனைத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் தமிழ் வழி மாணவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்தத் தேர்வை அனைத்து மாநில மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளில் நடத்தவும், தமிழகத்தில் திறன் சோதனை தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், திறன் சோதனை தேர்வுக் கட்டணத்தை குறைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில், மாணவர்களின் அறிவியல் திறனை சோதிக்கும் தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதில் மாநில மொழிகளை சேர்க்க குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். அடுத்தாண்டு முதல் திறன் சோதனை தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ.15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in