பொய் சொல்வதற்கே பிறந்தவர் ஈபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொய் சொல்வதற்கே பிறந்தவர் ஈபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதற்கே பிறந்திருக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (9.11.2021) சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள், அதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்பு, மழைநீர் வடிகால் வசதி என்று சொல்லி அந்தத் துறையின் அமைச்சர் சொல்லமுடியாத அளவிற்கு அதைப் பயன்படுத்தி அதிலும் கொள்ளையடித்திருக்கிறார். போன மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை சீர்படுத்தவேண்டும் என்று ஏற்கனவே கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை.

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளாரே?

அவர் பொய் சொல்வதற்கே பிறந்திருக்கிறார். இப்படித்தான் தேர்தல் நேரத்திலும் பொய் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது தேர்தல் முடிந்தபிறகு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார். அந்த வெறுப்பில், திமுக அரசு இவ்வளவு வேகமாகப் பணி செய்துகொண்டிருக்கிறார்களே என்று கடுப்பில், அவர் திடீரென்று வந்து ஒரு ஷோ காண்பித்து, இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் சேவை மக்கள் பணி, மக்களுக்கான பணிகள். நேரடியாகப் போகிறோம், மக்களைச் சந்திக்கிறோம், என்ன குறை என்று கேட்கிறோம். அதற்கு வேண்டியதைச் செய்து வருகிறோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுக்கான விசாரணை ஆணையம் அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அந்த அதிகாரி, அமைச்சர் உட்பட அனைவரும் மீது விசாரணை கமிஷன் பாயுமா?

நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in