சிறப்பு எஸ்.ஐ.யுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டியவர் கைது: வாகன சோதனையின்போது பரபரப்பு

ஆலங்காயம் பஜார்பகுதியில் எஸ்எஸ்ஐ உமாபதியும், வாகன ஓட்டி மணிகண்டனும் சட்டையை பிடித்து நடுரோட்டில் சண்டையிட்ட காட்சி | படம் ந.சரவணன்.
ஆலங்காயம் பஜார்பகுதியில் எஸ்எஸ்ஐ உமாபதியும், வாகன ஓட்டி மணிகண்டனும் சட்டையை பிடித்து நடுரோட்டில் சண்டையிட்ட காட்சி | படம் ந.சரவணன்.
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே வாகனை சோதனையின்போது எஸ்எஸ்ஐயுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் போலீஸார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனூர் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் ஆலங்காயம் பகுதிக்கு வந்தார். அப்போது, ஆலங்காயம் சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி (53) தலைமையில் காவல் துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

துரத்திப் பிடித்த போலீஸார்

அப்போது, அந்த வழியாக வந்த மணிகண்டன் வாகனத்தை காவல் துறையினர் மடக்கினர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் உமாபதி சென்றதால் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி அவரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று ஆலங்காயம் பஜார்பகுதியில் மடக்கினார்.

பிறகு, மணிகண்டனிடம் இருந்து வாகன சாவியை வாங்கி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது மணிகண்டன் அதை தடுத்தார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆவேசடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி பொதுமக்கள் முன்னிலையில் மணிகண்டனின் கன்னத்தில் அறைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மணிகண்டன் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி தாக்கினார். பொதுமக்கள் முன்னிலையில், இருவரும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் சண்டையிட்டனர். இதை அங்குள்ள சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று எஸ்எஸ்ஐ உமாபதியை தாக்கிய மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ள பஜார் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், வாகன ஓட்டியுடன் கட்டிப்புரண்டு நடுரோட்டில் சண்டையிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in