

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (9.11.2021) சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாறு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 771 கிலோ மீட்டருக்கு மழைநீர்க் கால்வாய்களைத் தூர்வாரியிருக்கிறோம். அங்கிருந்த ஆகாயத் தாமரைகளை எல்லாம் அப்புறப்படுத்தியிருக்கிறோம். போனமுறை வந்த மழையில் தண்ணீர் தேங்கியிருந்த இடங்களைப் பொறுத்தவரை 10 நாட்கள், 15 நாட்கள் இருந்தது. ஆனால் நேற்று தேங்கியிருந்த இடங்களிலெல்லாம் மழை கொஞ்சம் விட்ட நேரத்தில் வடிந்த இடங்களில் அது சரிசெய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் மெட்ரோ பணி நடக்கும் இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சிறிது தேங்கியிருக்கிறது. அதையும் எடுப்பதற்குக் கிட்டத்தட்ட 560 மோட்டார் பம்ப்செட்கள் வைத்து, எங்கெங்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றதோ, அங்கெல்லாம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதை வெளியில் விடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை இலவசமாக உணவு அளிப்பதற்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், மாநகராட்சி சார்பாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அதற்கென்று இருக்கும் சமையல் கூடங்களில் சமைத்து, சாம்பார் சாதம், தயிர்சாதம், சப்பாத்தி போன்றவற்றைத் தயார் செய்து எங்கெங்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு தினங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறார்கள், அதற்கு அரசு எந்த மாதிரியான தயார் நிலையில் இருக்கிறது?
வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருப்பது உண்மைதான். அதையும் மனதில் வைத்துக்கொண்டுதான், முதல்வர் என்ற முறையில் நானே எல்லா இடங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறேன். அதேபோன்று அமைச்சர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களிலும் ஆங்காங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒத்துழைத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லியிருக்கிறேன்.
மழைநீரை எப்போது அப்புறப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது?
முடிந்தவரையில் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். மழை முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் நிச்சயமாக எல்லாத் தண்ணீரும் அப்புறப்படுத்தப்படும்.’’
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.