

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தப் பாடுபடுவேன் என்று கூறிய மதுரை எம்.பி.யைக் காணவில்லை. அவர் ஓர் அறிக்கை கூடக் கொடுக்கவில்லை என்று கேரளா அரசையும், தமிழக அரசையும் கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் அத்துமீறும் கேரள அரசைக் கண்டித்தும், அதற்குத் துணை போகும் திமுக அரசைக் கண்டித்தும் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் மாநகர், மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாநகர் அதிமுக சார்பில் முனிச்சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகரச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்தார்.அப்போது கேரள அரசையும், திமுக அரசையும் எதிர்த்து அதிமுகவினர் கோஷமிட்டனர்.
செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ‘‘முல்லைப் பெரியாறு அணையில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர்தான் 132 அடி என்றிருந்த நீர்த் தேக்க அளவை 136 அடியாக உயர்த்தினார். அதன்பிறகு ஜெயலலிதா 142 அடியாக உயர்த்தினார். ஆனால், இன்று திமுக அரசு அதிமுக போராடிப் பெற்றுக் கொடுத்த தமிழக உரிமையை கேரளா அரசிடம் விட்டுக் கொடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பாஜக கூட குரல் கொடுக்கிறது. ஆனால், எப்போதும் உரிமைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சியைக் காணோம்.
அவர்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனைக்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன், நான் மக்களவை உறுப்பினரானவுடன் முதல் கட்டமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குப் பாடுபடுவேன் என்றார். ஆனால், அவரை ஆளேயே காணவில்லை. கேரளா அரசின் தலையீட்டைக் கண்டித்து ஒரு அறிக்கை கூடக் கொடுக்கவில்லை ’’ என்று தெரிவித்தார்.