தேவர் ஜெயந்தியில் போலீஸ் வேனில் நடனமாடிய வழக்கு: உதவிப் பேராசிரியரைக் கைது செய்யத் தடை 

தேவர் ஜெயந்தியில் போலீஸ் வேனில் நடனமாடிய வழக்கு: உதவிப் பேராசிரியரைக் கைது செய்யத் தடை 
Updated on
1 min read

தேவர் ஜெயந்தி தினத்தில் போலீஸ் வேன் மற்றும் வட்டாட்சியர் ஜீப்பில் ஏறி நடனமாடிய வழக்கில் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியரைக் கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக். 30-ம் தேதி தேவர் குருபூஜை நடைபெற்றது. அப்போது திருவாடானை வட்டாட்சியரின் ஜீப் மற்றும் போலீஸ் வேன் மீது சிலர் ஏறி நின்று நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இதையடுத்து மண்டலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் மீது பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, அரசு ஊழியர்களை ஆபாசமான வார்த்தைகளில் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 3 பேரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் போலீஸார் தேடி வரும் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.செந்தில்குமார், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம், முகமதுரஸ்வி வாதிடுகையில், ’’சம்பவத்தின்போது மனுதாரர் மண்டலமாணிக்கத்தில் இல்லை. கல்லூரியில் இருந்துள்ளார். அரசு வாகனங்களில் ஏறி நடனமாடியவர்களும், மனுதாரரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் மனுதாரரை போலீஸார் வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

பின்னர், அடுத்த விசாரணையை நவ. 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது, மனுதாரரின் கல்லூரி வருகைப் பதிவேடு மற்றும் சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in