

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்பதால் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 3 நாட்களுக்கு கனழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 09.11.2021 வரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 248.3 மி.மீட்டரை விட 46 சதவீதம் கூடுதல் ஆகும்.
குறிப்பாக செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 16 இடங்களில் மிக கனமழை / கனமழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:
* மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அணையிலிருந்து 20,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
* பவானிசாகர் அணையிலிருந்து, 10,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
* வைகை அணையிலிருந்து, 569 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.