

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர்வரத்து பெறமுடியாத நிலையில் ஆண்டிப்பட்டி விவசாயிகளைக் காக்க விரைவில் பட்டினிப்போராட்டம் மேற்கொள்ளப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட சில இடங்கள் மேட்டுப்பாங்கான பகுதிகளாக உள்ளன. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பாசன வசதி இன்றுவரை பெறமுடியாத நிலை ஏற்பட்டுவருகின்றன. இங்கு வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர்வரத்துக்கு ஆவண செய்யும்படி தமிழக பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் விடுத்துள்ள அறிக்கை:
ஒருபுறம் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளா அரசு தண்ணீரைத் திறந்து கடலுக்கு விடுகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு பாசன வாய்க்காலுக்கு அருகிலுள்ள மேட்டுப்பகுதியான ஆண்டிப்பட்டி,ஜி.உசிலம்பட்டி குளங்கள் வறண்டு கிடக்கின்றன. விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, தங்கள் பொருளாதாரத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இப்பகுதிகளுக்கு பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாஜக நிவாகிகளுடன் நவம்பர் 3-ம் தேதி சுற்றுப்பயணம் செய்தார்.
இப்பகுதியில் வறண்டுகிடக்கும் குளங்களை ஆய்வுசெய்து, அங்கு நீர் மேலாண்மையின் அவசியத்தையும், விவசாயிகளின் திட்டத்தையும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடமும், விவசாயசங்க பிரதிநிதிகளிடமும் நேற்று (08.11.2021) தேனியில் ஆலோசனை செய்தார்.
எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கையான புள்ளக்கவுண்டன்பட்டி முதல் கணேசபுரம் குளம்வரை குழாயின் மூலம் நீர்நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றத் தவறிய, திமுக அரசை கண்டித்து மாபெரும் பட்டினிப்போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.