

2015- ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னையில் தொடர்ச்சியாக 3 தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. 2015க்குப் பிறகு கடும் மழை வெள்ளத்தை சென்னை மாநகரம் சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 2015ல் செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிட்டதன் விளைவாக சென்னையில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதுவரை சென்னை சந்தித்திராத அவலத்தை அந்த வெள்ளம் கொண்டுவந்து சேர்ந்தது. இதனால் அரசும் நிர்வாகமும் பாடம் கற்றுக்கொண்ட நிலையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மராமத்துப் பணிகளை பெருநகர நிர்வாகம்மேற்கொள்ளவேண்டும் என்பது மக்கள் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
ஆனால் அதன்பிறகு 7 ஆண்டுகள் ஆனநிலையில் இதுவரை சந்தித்திராத அளவுக்கு கடந்த மூன்று நாட்களாக மழை கொட்டித் தீர்த்தன. இதனால் சென்னைப் பெருநகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு மீண்டும் மழைவெள்ள சூழல் ஏற்பட்டுள்ளதால் 2015க்கு பிறகு அரசும் நிர்வாகமும் கற்றுக்கொண்ட பாடம்தான் என்ன என மக்கள் மனதில் கேள்வியாக இருந்துகொண்டிருக்கிறது.
இதை பிரதிபலிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் இன்றைய காலை அமர்வில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளது. 2015 வெள்ளத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டநடவடிக்கை என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? மீண்டும் சென்னையை தத்தளிக்க விட்டுவிட்டார்களே மழைநீர் தேங்காமல் தடுக்க என்னதான் செய்துகொண்டிருந்தார்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எழுப்பியுள்ளது.