

திடீர் வெள்ளப் பெருக்கை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி அளவில் 118 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் அணைக்கு வரும் நீர் முழுவதையும் காவிரியில் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்ற சூழல் காணப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று அதிகாலை 5 மணி அளவில் 119 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 26,440 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் இன்று மதியத்திற்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலை ஏற்பட்டது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் உபரி நீரால் டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க திட்டமிடப்பட்டது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 119 அடியாக நிலைநிறுத்தி, அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் மட்டும் காவிரியில் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் மூலம் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அதனை மேட்டூர் அணையில் தடுத்து, டெல்டா மாவட்டங்களுக்கு சீரான நீர் திறப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.