

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மண்டல கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தண்டையார்பேட்டை,கோடம்பாக்கம், திரு.வி.க நகர், சோழிங்கநல்லூர், பெருங்குடி பகுதிகளில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியது. இங்கு தற்போது மழை நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வீடுகளை விட்டு வெளியேறி உணவின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதனிடையே, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை குறித்து அந்தந்த மண்டல கண்காணிப்பாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.