வேலூரில் 12 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக: அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு?

வேலூரில் 12 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக: அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு?
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது உறுதியானதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுகவில் வேட்பாளர் தேர்வு தொடங்கி, மாவட்டந்தோறும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அமைச்சர்கள் மூலம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே பெற்றனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிக்கான 39 பேர் அடங்கிய பட்டியலை அமைச்சர் கே.சி.வீரமணி அளித்தார்.

இந்நிலையில், சீட்டு கேட்டு விண்ணப்பித்த பலருக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளைச் சேர்ந்த 27 பேர் முதல் கட்டமாக அழைக்கப் பட்டனர்.

பட்டியலில் இடம் பெற்றவர்கள்

திருப்பத்தூருக்கு டாக்டர் திருப்பதி, டி.டி.குமார், ராஜேந்திரன். வாணியம்பாடிக்கு ஆலங்காயம் ஒன்றியப் பெருந்தலைவர் கோபால், வாணியம்பாடி நகராட்சி தலைவர் நிலோபர் கபீல், கண்ணபிரான்.

ஆம்பூருக்கு பாலசுப்பிர மணியம், டில்லிபாபு, நஜிர் முகமது, அணைக்கட்டுக்கு ஆவின் பெருந்தலைவர் வேலழகன், ஆனந்தன்.

கே.வி.குப்பம் தொகுதிக்கு லோகநாதன், ரமேஷ்குமார், எம்.டி.பாபு. வேலூர் தொகுதிக்கு ப. நீலகண்டன், சிவாஜி, சொக்க லிங்கம்.

காட்பாடி தொகுதிக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமு, எஸ்.ஆர்.கே.அப்பு, கோரந்தாங்கல் குமார். ஆற்காடு தொகுதிக்கு சாரதி, நந்தகோபால், கோடாலி ராமதாஸ். ராணிப்பேட்டை தொகுதிக்கு ஷாபுதீன், ஏழுமலை, சுகன்யா மோகன்ராம் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து, அதிமுக நிர் வாகிகள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் வீரமணி யால் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இருந்த பெரும்பாலான நபர்களை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.

மேற்கு மாவட்டத்தைப் பொறுத் தவரை கட்சிக்காக நீண்ட நாள் உழைத்தவர்கள். அமைச்சருடன் 5 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்தவர்களே உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே தலைமைக் கழகத்தில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டவர்கள்.

அதேபோல, ஜோலார்பேட்டை தொகுதிக்கு அமைச்சர் வீரமணி போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இதனால், அந்தத் தொகுதியில் இருந்து யாரையும் அழைக்கவில்லை.

அரக்கோணம் தனித் தொகுதிக்கு மட்டும் நாளை (இன்று) நேர்காணல் நடக்கிறது. அரக்கோணம் நகராட்சித் தலைவர் கண்ணதாசன், நெமிலி ஒன்றியத்தைச் சேர்ந்த மணிவண் ணன், இச்சிப்புத்தூர் கிராம ஊராட்சித் தலைவர் குணபூஷனம் பால்ராஜ். சோளிங்கருக்கு ஏ.எல்.விஜயன், காவேரிப்பாக்கம் சம்பத் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

குடியாத்தம் தனித் தொகுதியில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் தொகுதியில் இருந்து யாரையும் நேர்காணலுக்கு அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் முடிவுகள் மாறலாம்’’ என்றனர்.

இதன் மூலம் வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 தொகுதிகளில், 12 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந் துள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டி யிட்ட அதிமுக, கூட்டணி கட்சிக்கு 6 தொகுதிகளை விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நேர்காணல் தாமதமானதால், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அனை வரும் இன்று நேர்காணலுக்கு வரு மாறுஅழைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in