

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா நவ.13-ம் தேதி நடைபெற உள்ளது.
உலகமே வியக்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி சதயநட்சத்திரம் அன்று, சதய விழாவாகஆண்டுதோறும் கொண்டாடப்படு கிறது.
அதன்படி, மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா நவ.13-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் இவ்விழா, கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல நடப்பு ஆண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படும்.
இதையொட்டி, பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம், துணைத் தலைவர் சி.மேத்தா,தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் ச.கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நவ.13-ம் தேதி சதய விழா அன்று,காலை 7 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலைஅணிவித்தல், 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால் பேரபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மாலை 6 மணிக்கு கோயில் பிரகாரத்துக்குள் சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.