மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் அதிமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள், தற்போது பெரும் மழை வெள்ளத்தால் கண்ணீர் கடலில் மூழ்கி இருப்பதை பார்க்கும்போது நெஞ்சம்பதறுகிறது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பதுபோல, நிர்வாகத் திறமையும், தொண்டு செய்யும் தூய உள்ளமும் இருந்தால்தானே மக்களுக்காக இன்றைய ஆட்சியாளர் உழைத்திருப்பார்கள்.

ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்காமல், களத்தில் இறங்கி மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பணிகளில்அனைத்து அதிமுக தொண்டர்களும் ஈடுபட வேண்டும். சுனாமி,பெருமழை வெள்ளம், புயல் உள்ளிட்ட ஏராளமான பேரிடர் காலகட்டத்தில் மக்களின் பசிப்பிணியை போக்கிய பயிற்சி நமக்கு உள்ளது. நமக்கு வசதி வாய்ப்பு குறைவுஎன்றாலும், இருப்பதை பகிர்வோம்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும், வயிறார உணவு கிடைக்கவும், மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முகாம் அமைக்கவும் உதவ வேண்டும். வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் சமூக ஊடகங்கள் வழியாக எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவையான பொருட்களை வழங்கி, அதிமுகவின் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் மீட்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் எல்லாமுமாக இருந்து மக்களின் நலன் காக்கும் மாவீரர்கள் நாம் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டுங்கள்.

இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in