பாஜக தேசிய செயற்குழுவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம்: தீர்மானத்தை வழிமொழியும் வாய்ப்பு பெற்றார்

பாஜக தேசிய செயற்குழுவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம்: தீர்மானத்தை வழிமொழியும் வாய்ப்பு பெற்றார்
Updated on
1 min read

பாஜக தேசிய செயற்குழுவில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் உயர் அதிகாரம் மிக்க தேசிய செயற்குழு கூட்டம்கடந்த 7-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டபின்னடைவு, குறிப்பாக இமாச்சலபிரதேசம், ராஜஸ்தானில் ஏற்பட்ட தோல்வி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசியல் தீர்மானம்

பாஜகவின் அடுத்த ஓராண்டுக்கான அரசியல் தீர்மானத்தை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை தமிழக பாஜகதலைவரும், பாஜக மாநிலத் தலைவர்களிலேயே இளையவரான கே.அண்ணாமலை வழிமொழிந்து பேசினார். மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்தியஅமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும்போது அண்ணாமலைக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பாஜகவிலேயே பலரை வியப்பில்ஆழ்த்தியுள்ளது. அவருக்கு கிடைத்த வாய்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அப்போது பேசிய அண்ணாமலை, ‘‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா...” எனத் தொடங்கும் பாரதியார் பாடலையும் “கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு, என்னாற்றுங் கொல்லோ உலகு’’ என்ற திருக்குறளையும் தமிழில் குறிப்பிட்டு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in