Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது; 10, 11-ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும்: கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- சென்னையில் 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

சென்னை, பெரம்பூர், முல்லை நகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவர்கள் உடனிருந்தனர்.

சென்னை

வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11-ம் தேதி அதிகாலை வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (10, 11-ம் தேதிகளில்) கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய அதிகனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின் றன. சாலைகள் மற்றும் குடி யிருப்புகளை தண்ணீர் சூழ்ந் துள்ளது.

கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. பிரதான ஏரிகள் நிரம்பி வருவதால் உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால், நீர்வழித் தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கரையோர மக்கள் பாது காப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் 9-ம் தேதி (இன்று) தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். 11-ம் தேதி அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இதன்காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை 11-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. 9-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20 செ.மீ. மழை

டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 10-ம் தேதி கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (20 செ.மீ. அளவுக்கு மேல்) பெய்யக்கூடும். 11-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதன் காரணமாக தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, வரும் 11-ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்புப் பணிகள் தீவிரம்

இதனிடையே, சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சென்னையில் மொத்தம் 317 இடங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் வைத்து கடந்த 2 நாட்களாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி நடவடிக்கையால் தற்போது நீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை 177 ஆக குறைந்துள்ளது. அந்தப் பகுதிகளிலும் நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 169 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது 58 இடங்களில் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. 20 இடங்களில் செயல்படும் பொது சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களில் சுமார் 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. தடையின்றி உணவு வழங்குவதற்காக 200 வார்டுகளுக்கும் தலா ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சி நடவடிக்கையால் தற்போது 14 சுரங்கப் பாதைகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து அனுமதிக்கப்பட் டுள்ளது. வேளச்சேரி உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் 41 பகுதிகளில், மீட்பு பணிகளை மேற்கொள்ள படகுகள் மற்றும் அதை இயக்குவதற்கான மீனவர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ள னர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

2-வது நாளாக முதல்வர் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். எழும்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேற்று முன்தினம் முதல்வர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் வெள்ள நீர் வடியும் பக்கிங்ஹாம் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கினார். மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கான சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின், ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், எம்கேபி நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, பால், ரொட்டி, பாய், போர்வை, துண்டு போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினார். கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்த முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x