Published : 09 Nov 2021 03:09 AM
Last Updated : 09 Nov 2021 03:09 AM

மதுராந்தகம் ஏரி நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று அதன் முழு கொள்ளவை எட்டியது. அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. இதன் நீர்மட்டம் 23.30 அடி. இந்த ஏரி அதன் முழு கொள்ளவை எட்டிய நிலையில், ஏரிக்கு விநாடிக்கு 1000 கன அடி நீர் வருகிறது. அதே அளவு உபரிநீர் வழிந்தோடி கிளியாற்றின் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. ஏரிக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில் கிளியாற்றின் வழியாக வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில், ``மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் கிளியாற்றை ஒட்டியுள்ள கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், முருகஞ்சேரி, குன்னத்தூர் மற்றும் நீலமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் செல்லக் கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் வெள்ளநீர் செல்லும் கிளியாற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். கால்நடைகளை ஆற்றில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள சிறுவர்கள் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x