

உயர் நீதிமன்றத்தால் நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கைக்கு பரிந்துரைக் கப்பட்டுள்ள மேலூர் நீதித்துறை நடுவர், கிரானைட் கற்களை அரசுட மையாக்கக் கோரிய வழக்கு களைத் தள்ளுபடி செய்து பிறப் பித்த உத்தரவு நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை உலுக்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக குவாரி அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் மீது மேலூர், கீழவளவு, மேல வளவு, ஒத்தக்கடை காவல் நிலை யங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 98 வழக்குகளில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கனிமவளம் திருட்டு, வெடிபொருள் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சிறப்பு சட்டப் பிரிவு களின் கீழ் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதில் குற்றம் சுமத்தப்பட்டோ ருக்கு சிறியளவில் தண்டனை கிடைக்கக்கூடிய இபிகோ 379-வது பிரிவை (திருட்டு) மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, மற்ற கடுமையான பிரிவுகளின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்க மறுப்பதாக மேலூர் நீதித்துறை நடுவர் மீது அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, மேலூர் நீதித்துறை நடுவர் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாகவும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட் டுள்ள தீவிர குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்காமல், சாதா ரணமான திருட்டு குற்றச்சாட்டை மட்டும் விசாரணைக்கு ஏற்றதாக வும், இதனால் அனைத்து குற்றச் சாட்டுகளையும் விசாரணைக்கு ஏற்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘98 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட் டுள்ள அனைத்து குற்றச்சாட்டு களையும் விசாரணைக்கு ஏற்க, மேலூர் நீதித்துறை நடுவருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த உத்தரவை செயல்படுத்த வில்லை என்று கூறி, மேலூர் நீதித்துறை நடுவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதி மன்ற கிளையில் அரசுத் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததற்காக மேலூர் நீதித்துறை நடுவர் கே.வி.மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘தூங்குபவர்களை எழுப்பிவிடலாம், தூங்குவது போல பாசங்கு காட்டுபவர்களை எழுப்ப முடியாது. அதில் மேலூர் நீதித்துறை நடுவர் 2-வது ரகம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி அரசுத் தரப்பில் முதன்முதலில் தாக்கல் செய்த 2 வழக்குகளை தள்ளுபடி செய்தும், அந்த வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தும், அந்த வழக்கை தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மேலூர் நீதித்துறை நடுவர் கே.வி.மகேந்திரபூபதி. அவரின் இந்த தீர்ப்பு நீதித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேல்முறையீடு
மேலூர் நீதித்துறை நடுவரால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டவர்களில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலாவும் ஒருவர். அவர் கூறும்போது, “கிரானைட் வழக்குகளில் ஆரம்பத்தில் இருந்தே மேலூர் நீதித்துறை நடுவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். அவர் அரசுத் தரப்பை மதிப்பதே இல்லை. கிரானைட் வழக்குகளின் விசாரணை முறையாக நடைபெற மேலூர் நீதித்துறை நடுவரை மாற்ற வேண்டும்; அல்லது கிரானைட் வழக்குகளை மேலூர் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.
கிரானைட் வழக்குகளை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக, மேலூர் நடுவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவரது இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்றார்.
34 வழக்குகள் ஒத்திவைப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்கவும், இதில் தொடர்புடைய கிரானைட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் களாக இருந்த அன்சுல்மிஸ்ரா, சுப்பிரமணியன் ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 180 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு எதிரானவை. இதில் 2 வழக்குகள் தள்ளுபடியான நிலையில், மற்ற வழக்குகளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி முந்தைய ஆட்சியர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த 34 வழக்குகள் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.