

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமான மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
புனித வெள்ளியான இன்று (25-ம் தேதி) அரசு விடுமுறை. நாளையும் நாளை மறுநாளும் சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இதனால், அரசு அலுவலகங்களுக்கும், சில தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல ஏராள மான மக்கள் நேற்று மதியம் முதல் புறப்படத் தொடங்கினர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையங்களி லும், தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, ‘‘பொங்கல் பண்டிகைக்கு பிறகு பெரிய அளவில் பயணிகள் கூட்டம் இல்லாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே, விழுப்புரம், கும்பகோணம், விரைவு போக்கு வரத்து கழகம் ஆகிய அரசு போக்கு வரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஞாயிறு மாலையிலும் இதே அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்’’ என்றனர்.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் அதிக மாக கூட்டம் இருந்தது. அறிவிக்கப் பட்ட சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அதிகம் இருந்தது.