Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM
தோல்வியை கண்டு யாரும் மனம் தளர வேண்டாம், தோல்விதான் வெற்றியை தேடித் தரும் என அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர்கள், தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செய லாளருமான கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று முதலில் நாம் ஆராய வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்து விட்டோம் என யாரும் மனம் தளரக்கூடாது. தோல்விதான் அடுத்து வெற்றியை தேடி தரும்.
இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத வர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நாம் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். அதன் மூலம் அடுத்து வரும் தேர்தலில் நாம் மக்களிடம் தயங்காமல் வாக்கு சேகரிக்க முடியும். தேர்தல் தோல்வியை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
இக்கூட்டத்தில் கந்திலி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT