Published : 08 Nov 2021 08:20 PM
Last Updated : 08 Nov 2021 08:20 PM

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

உச்ச நீதிமன்றத்தின் 28.10.2021 ஆணையில் வெளியிடப்பட்ட அறிவுரையின்படியே, முல்லைப் பெரியாறு உபரிநீர் போக்கிகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் எனவும், கேரள மாநில அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா எனவும் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கேள்வி கேட்டுள்ளார். இது குறித்து ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை திறப்பதற்கான நடைமுறை விதிகளின்படி, திறப்பதற்கு முன்பாக கேரள மாநில அரசுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீர் கொள்ளளவு அதிகமாக வருவதை 27.10.2021 அன்று கேரள அரசுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் 29.10.2021 அன்று உபரி நீர் போக்கி மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 29.10.2021 காலை 7.29 மணிக்கு தமிழக நீர்வளத்துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் அம்மாநில அலுவலர்களும் அணையை பார்வையிட்டனர்.

எனவே அணையின் உபரிநீர் போக்கியை திறக்கலாம் என்பது அணையை பராமரிக்கும் தமிழக நீர்வளத்துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட முடிவாகும். கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஜோ. ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவின் மீது 28.10.2021 அன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஆணையின்படி, மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த நீர்மட்ட அளவுகளை அடிப்படையாகக் கொண்டு வல்லுநர் குழு அவ்வப்பொழுது அணையின் நீர்மட்டம் குறித்து வெளியிடும் அறிவிப்புகளை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் வல்லுநர் குழு தனது முடிவுகள் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றிக்கொள்ளலாம்.

மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த நீர்மட்ட அளவுகளின்படி (Rule Curve) அணையின் நீர்மட்டம் 10.10.2021 அன்று 138.50 அடியாகவும், 20.10.2021 அன்று 137.75 அடியாகவும், 31.10.2021 அன்று 138.00 அடியாகவும் இருக்க வேண்டும்.

27.10.2021 மாலையிலிருந்து அணையின் நீர்மட்டம் அதிகரித்து 28.10.2021 காலை நீர்மட்டம் 138.05 அடியாகவும், 29.10.2021 அன்று நீர்மட்டம் 138.75 அடியாகவும் இருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நீர்மட்ட அளவுகளின்படி 138 அடியாக இருந்திருக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் எடுத்த போதிலும் நீர்மட்டம் அதிகரித்தது. எனவே, அதிகப்படியான நீர் அணையின் உபரிநீர் போக்கிகள் வழியாக தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட்ட பிறகுதான் தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாக இருந்தது. எனவே உபரிநீர் போக்கிகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 28.10.2021 ஆணையில் வெளியிடப்பட்ட அறிவுரையின்படி ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருக்கும் நீரானது திறந்துவிட வேண்டியதாயிற்று.

அணையின் நீர்மட்டம் 30.11.2021 அன்று 142 அடியை எட்டும். இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x