

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்கள் மழைக்கே சென்னை தத்தளிப்பதால், செம்பரம்பாக்கம் ஏரி நிலவரத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அடையாற்றின் வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கும், ஆகையால் அடையாற்றில் வந்தடையும் நீர் முகத்துவாரத்தை நேரில் சென்று ஆய்வு செய்தேன். தற்போது இங்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகமாகவே உள்ளது.
நீர்வரத்து மேலும் அதிகரித்தால் உபரிநீரின் அளவு கூடுதலாக திறக்கப்படும். நீர் வீணாகிறேதே என்ற கவலை இருந்தாலும், மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு உபரிநீர் கூடுதலாக திறந்து விடப்படும்.
பொதுமக்கள் அடையாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கும் மற்றும் அரசு நிவாரண முகாம்களுக்கும் சென்று தங்களை பாதுகாத்துக்கொண்டு அரசுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இருநாட்களுக்கு வானிலை ஆய்வு மையத்தால் மழைப்பொழிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழைப்பொழிவினை எதிர்கொள்வதற்குண்டான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாய்வின் போது மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப, முதன்மை தலைமைபொறியாளர் கு.இராமமூர்த்தி, மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டதால் தலைநகர் பெரும் சேதத்தை சந்தித்தது.