ஓய்வுபெற்ற பிறகு விடுப்பு ஊதியம்: வட்டியோடு சேர்த்து வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை உயர்நீதிமன்றக் கிளை | கோப்புப் படம்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை | கோப்புப் படம்.
Updated on
1 min read

ஓய்வுபெற்ற பிறகும் விடுப்பு ஊதியம் பெறமுடியாமல் தவித்த ஊழியருக்கு வட்டியோடு சேர்த்து வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை அரசு போக்குவரத்து கழக ஊழியர் என்.ஆர்.சுரேஷ்பாபு ஓய்வுபெற்று நீண்டகாலமாக நிலுவைத் தொகைகள் பெறுவதற்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார். அவருக்கு உடனடியாக வட்டியோடு அவருக்கு சேரவேண்டிய பாக்கித் தொகைகளை வழங்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

என்.ஆர்.சுரேஷ்பாபு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது எனக்குரிய ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் தரப்படவில்லை. அதனை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இவரது மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை 6 தவணைகளில் வழங்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் என 26.2.2021-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வு பெற்ற சில நாட்களில் ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும் மனுதாரர் ஓய்வு பெற்று நீண்ட நாளாகியும் அவருக்கு ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு 6 தவணைகளில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் பெற உரிமையுள்ள போது, அந்த தொகையை அதிகாரிகள் உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் உடனடியாக வழங்குவதில்லை. அதிகாரிகளின் தவறுக்காக ஊழியர்களை தண்டிக்கக்கூடாது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. மேல்முறையீடும மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in