

வெள்ள நிவாரணப் பணிகளில் முனைப்பு காட்ட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாகி, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை பெருநகரைச் சுற்றிலும் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரின் தெருக்களிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதிலும் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரும், அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் களப் பணியாற்றி வருகிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழையால் குடிசை வீடுகள், சாதாரண சுவர்கள் உட்பட அரசால் கட்டப்பட்ட பழைய தொகுப்பு வீடுகளும் இடிந்து விழுந்து வருகின்றன.
குறுவை சாகுபடி விளைந்து அறுவடைப் பணிகள் தொடங்கிய நிலையில் பெய்து வரும் கனமழை இயல்பான அளவை விட மிகக் கூடுதலான அளவில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன.
குறுவை அறுவடை முடிந்த பகுதிகளில் தாளடி சம்பா பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. நடவு செய்து 15 நாட்கள் தாண்டாத நிலையில் தாளடி சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இயற்கை பேரிடர் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் துயரம் மிகுந்த, பேரிடர் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளும், உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கள விசாரணை நடத்தி, உரிய அரசு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்று, நிவாரணம் பெற்றுத் தருவதில் அரசுடன் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.