பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு: நவ.11-ம் தேதி பெண் எஸ்.பி., கணவர் நேரில் ஆஜராக நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்குத் தொடர்பாக வரும் 11-ம் தேதி பெண் எஸ்.பி, அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாகப் பணியாற்றி வந்தவர் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர். இதனையடுத்து இருவரிடமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது பெண் எஸ்.பி. கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்கள் அளித்த பதில்களை நடுவர் கோபிநாதன் பதிவு செய்தார்.

இதனையடுத்து தன்னைப் பணியிடை நீக்கம் செய்து வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த அப்போதைய மாநில உள்துறைச் செயலாளரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. தரப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அரசுத் தரப்பு, முதலில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புகார் கூறிய பெண் எஸ்.பி.யிடம் விசாரணை நடத்த வேண்டும் என வாதம் செய்தது.

இதனையடுத்து முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. தரப்பு வைத்த கோரிக்கையை நிராகரித்த நடுவர் கோபிநாதன், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண் எஸ்.பி. மற்றும் அவரது கணவரிடம் முதலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

பின்னர், வரும் 11-ம் தேதியன்று பெண் எஸ்.பி. மற்றும் அவரது கணவர் இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in