பருவமழை தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தல்

பருவமழை தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

பருவமழை தீவிரத்தை உணர்ந்து அரசு இயந்திரம் முழுமையாக செயல்படவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்கு பருவமழையின் தொடக்க நிலையிலேயே சென்னைமாநகர வீதிகளில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. நகரமே குளம்போல தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இருப்பிடங்களுக்குள் மழைநீர் புகுந்து அல்லல்படுவதை பார்க்கும்போது மிகுந்த மனவேதனையும், துயரமும் ஏற்படுகிறது.

சமீபத்தில் அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்த்த பிறகாவது, உரிய முன்னேற்பாடுகளை தமிழக அரசுசெய்திருக்க வேண்டும். வருமுன்காக்கும் வழிகளில் கவனம் செலுத்தியிருந்தால் சென்னை, புறநகர் பகுதிகள் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்திருக்காது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற அதிமுக அரசு செய்த முயற்சியை இந்த அரசு பின்பற்ற வேண்டும்.

தமிழக முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பருவமழை பற்றி விவாதித்ததாக செய்திகள் வந்தன. ஆனாலும், தற்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பார்த்தால், முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. தற்போது அம்மா உணவக பெண்ஊழியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களுக்கு உணவுஅளிக்க ஓடோடி பாடுபடும் பெண்களின் வயிற்றில் அடிக்காமல், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

அதேபோல, கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள், தண்ணீர்தேங்கியுள்ள மற்ற பகுதிகளை சேர்ந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தேவையான உணவு, முகக் கவசம், மருத்துவ வசதிகளை வழங்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை துரிதப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலகத்திலேயே மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழந்தார். அதுபோலவும், மின்கம்பி அறுந்து விழாத வகையிலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருமுன் காப்பதே வழி

ஓரிரு நாட்கள் மழைக்கே இப்படிஎன்றால், இனிவரும் நாட்கள் எப்படி இருக்குமோ என்ற கவலைஅனைவரின் நெஞ்சிலும் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக பெருமழையையும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. இருப்பினும் வருமுன் காப்பதே மக்களைக் காப்பதற்கு நமக்கு இருக்கும் ஒரே வழி.

எனவே, நிலைமையின் தீவிரம் உணர்ந்து அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in